Monday, October 19, 2009

வணக்கம் நண்பர்களே..!

இது என் இரண்டாவது படைப்பு..சற்று, அல்ல...! ரொம்பவே தாமதமான படைப்பு..எனினும் எனது நெஞ்சத்தின் வெளிப்பாடாம் தமிழ் மொழியில் நான் கொடுக்கும் அடுத்தப் படைப்பு..முதலில், எழுத்துவோற்கு உதவி புரியக்கூடிய ஒரு கட்டுரையை வரைந்தேன்..இப்போது எழுத்தை, அதனை ரசிக்கும் மக்களின் ரசனையை,முக்கியமாக சினிமா என்ற ஊடகத்தை மக்கள் எதிர்நோக்கும் விதத்தையும், அதில் தேவைப் படும் மாற்றங்களையும் கலைஞன் என்ற முறையில் முன் வைக்கிறேன்...!

எழுத்து ,இது வரை...
எழுத்து என்பது இதுவரை, தமிழ் நாட்டில்,ஒரு வட்டத்திற்குள்ளேயே சுழன்று வருகிறது..எழுதுவோர், நாவல்,கட்டுரை,சிறுகதை,இலக்கியம்,அதன் உரை,கவிதை,போன்ற எழுத்தின் பரிணாமங்களில், ஒன்றையோ, அல்லது பலவற்றையோ, தங்களின் திறமைக்கு தகுந்தாற்போல் தேர்ந்தெடுத்து தமிழுக்கு தங்கள் எழுத்தால் தொண்டாற்றி வருகின்றனர்..எழுத்தின் பரிணாமங்களை மாற்றுதர்கில்லை.அத்தகைய மாற்றத்தை பற்றி யோசிக்க இன்னும் நம்முடைய நிலை உயரவில்லை..எனினும்,பரிணாமங்களில் நாம் பின்பற்றும் மரபுகளை இன்னும் மாறாமல் கடைப்பிடித்தாலே யோசிக்கத்தூண்டுகிறது..!
மரபுகள் மனிதன் உருவாக்கியவையே..! அவன் காலக்கட்டத்தில் எவை வசதியாய்,தேவையாய்,பயனுள்ளதாய் இருக்கின்றனவோ, அதை மரபாக ஆக்கினான் மனிதன்..அதைப் பின்பற்றுபவர்கள் 'மரபு' எனும் பெயரை மட்டுமே உள்வாங்கிக்கொண்டு, அதன் மூலப்பொருளை மறந்து போவதே வருத்ததிற்குரிய விஷயம்..!

எல்லா மரபுகளையும் மாற்ற வேண்டும் என்பவன் தர்க்கவாதி...தேவையான மாற்றங்களை முன் வைப்பவன் புரட்சியாளன்..! நான் அப்படி ஒரு தொண்டனாக இருக்கவே ஆசைப்படுகிறேன்...

எழுத்தில், இது வரை,இப்படித்தான் எழுதவேண்டும் என்ற மரபை பலர் உடைத்து விட்டனர்..உதாரணம்,சுஜாதா...அவரின் எழுத்தில்,எளிமை, சேரியின் சாக்கடை வரை பாயும்...! ஆனால்,எளிமையை தொடங்கி வைத்தவர் மகாகவி பாரதியாக இருக்க வேண்டும்..அல்லது அதற்க்கு முன்னர் திருவள்ளுவராக இருந்திருக்க வேண்டும்..யார் முதல்வர் என்ற சர்ச்சையை விடுத்து, அவர் செய்த புரட்சிகளை மட்டும் மெச்சுவோம்...!

அத்தகைய புரட்சிகளை முன்னோர்கள் செய்திருக்க,அவர்களின் வழியில் வரும் நாம், தேவையான புரட்சிகளில் ஈடுபட நம்மை சீற்படுத்திக்கொள்ள வேண்டும்...என்ன மாதிரியான புரட்சி? அதை எழுதுவோர் மட்டும் தான் செய்ய வேண்டுமா?...

எழுத்தில் அடுத்த படி...!

எப்போதுமே, ஒரு மாற்றத்தை கொண்டு வர எண்ணும் போது, அதை ஜீரணிக்க முடியாதவர்கள் முன் வைக்கும் முதல் தர்க்கம்,
" முன்னோர்களின் மேதகு மரபுகளை இந்த சிறு தேவைக்காக மாற்ற முடியாது..", என்பதே..!
இவர்களின் இத்தகைய கூற்றுக்கு முக்கியமான காரணம், மரபுகளின் முக்கியத்துவத்தை விடுத்து, அவற்றை மேலோட்டமாக இவர்கள் நேசித்து விட்டதே ஆகும்..தங்களின் சுய நலத்தை,மக்களின் ரசனையின், பழக்கவழக்கத்தின் பெயர் கொண்டு மூடி மறைக்க எண்ணும் தர்கவாதிகள் அவர்கள்..அவர்களால் அந்த மாற்றத்திற்கு ஈடு கொடுக்க இயலுமா என்ற கேள்வி,அவர்கள் மனதை, அந்த மாற்றத்தையே மறுக்கத் தூண்டுகிறது...மக்கள், முதன்முதலில், மரபுகளையே கடைபிடிக்காமல் இருந்த சமயத்தில், மரபுகளை அவர்களின் நலனுக்காகவும், சுகத்திற்காகவும் கொண்டு வர எண்ணிய போதும், இதே மாதிரியான தடைகள் தான் இருந்திருக்கும்..ஆனால் அதை மீறி,கொண்டு வந்துவிட்டால்,இந்தகைய இயந்திர மூளைகள் சில "தேவை இல்லாத வேலை..எவனும் பின்பற்ற மாட்டன்" என்று கூறி விட்டு,சில காலம் கழித்து எல்லோரும் கடைப்பிடிப்பதை பார்த்து விட்டு, தங்கள் குழந்தைகளுக்கே இதை தாங்கள் புரட்சியாக பொய்யுரைத்துக் கதை சொல்லும்..

ஆக, உங்களிடம், மாற்றத்தின் தொடக்கத்தைப் பற்றி இருந்த சிறு பயத்தை போக்கிவிட்டேன் என்று எண்ணுகிறேன்..மக்களின் ரசனை,நாம் என்ன சொல்கிறோம் என்பதை பொறுத்தே...

அவர்களிடம்,ஒருவன் மாடியிலிருந்து குதித்து விழுந்து மடிந்தான் என்று சொல்லிப் பாருங்கள்..அதே போல்,ஒருவன் ஆகாயத்திலிருந்து பூமிக்கு குதித்து எதிரியை அழித்தான் என்று சொல்லிப் பாருங்கள்..இரண்டாவதாக சொல்வதைத் தான் அவர்கள் விரும்புவார்கள்..ஏன் என்றால் அவர்களால் முடியாத ஒன்றை போற்றிப்பாடவே அவர்கள் மனம் விரும்பும்..ஆனால் உண்மையில் முதலில் கூறியதே நிஜம்.அதுவே இயல்பு. மக்களுக்கு, நல்லது,விருப்பதிற்க்குரியது என்ற இரு விஷயத்திற்குள் உள்ள வேற்றுமை தெரியாது..அவர்கள் விரும்பும் அனைத்தும் நல்ல படைப்பும் அல்ல..விரும்பாத அனைத்தும் கெட்டவயும் அல்ல..எப்படி உடம்பை குணப்படுத்தும் மருந்து கசக்கிறதோ, எப்படி நாவிற்கு இனிப்பாய் உள்ளவை உடம்பை கேடுக்கிறதோ அப்படியே..இயல்பை மட்டும் காட்டிய நாட்களில் அவர்கள் அதையும் ரசித்தனர்..அசாதாரணத்தை காட்டியபோது அதை விட ரசித்தார்கள்..ஆனால் அசாதாரணம் நிலைக்காது..இயல்பு கசக்கும்..ஆனால் பல காலம் அவையே நிலைக்கும்..தர்மம் இறந்ததை போல் தோன்றினாலும் எப்படி அது சில காலம் கழித்து உயிர்பெற்று எழுகிறதோ அப்படி..

ஆக, மக்களை எந்த பாதையில் செயல் படுத்த வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டிய பொறுப்பு நம்மிடம்..மேலும், மக்களுக்கு, எழுத்து, பொழுதுபோக்கிற்கான ஒரு ஊடகமாகவே தேவைப்படுகிறது..பல விஷயங்களை அவர்கள் படித்து தெரிந்திருப்பார்..சினிமாவில் பார்த்து தெரிந்து கொண்டிருப்பார்..அதையெல்லாம் கற்றதினால் அவர்களின் வாழ்க்கையில் நன்மைகளும் நிகழ்ந்திருக்கும்..அவற்றையெல்லாம் அவர்கள் வியந்தும் பார்த்திருப்பார்...ஆனால் சில நாட்கள் கழித்து, அவர்கள் கற்றது, படித்துத் தான், பார்த்து தான், என்று மறந்த பிறகு,எழுத்தையும் சினிமாவையும் ஒரு பொழுது போக்குச் சாதனமாகவே கூப்பிடுவார்...ஏன் என்றால் அவர்களுக்கு இது தொழில் இல்லை..தொழிலாக கருதுபவர்களுக்கே அதன் மகத்துவம் தெரியும்..சிலருக்கு தொழிலாய்க் கொண்டாலும் அது புரிவதில்லை..

முன்பெல்லாம் தெருக்கூத்து நடத்திக்கிக் கொண்டிருந்தவர்களை, கூத்து நடக்கையில் பார்த்துக் களித்துவிட்டு,பின்னர் மதிக்க மாட்டர்கள்..அவர்களை ஏதோ பிச்சைக்காரனைப் போலவே நடத்துவர்...அவன் வெறும் கேளிக்கைப் பொருளாய் பார்க்கப்பட்டவரை..பின்பு ரீல் வண்டி எடுத்து வந்து படம் காட்டினவன் கூத்தாளிகளை விட மதிக்கப்பட்டான்..பின்னர் சினிமாகாரன் வந்து ரீல் வண்டியை ஈடு செய்த பின் அவன் பெரிய ஆள் ஆனான்..இவ்வாறு மாற்றத்தை கொண்டு வந்தால் தான் எதற்குமே மதிப்பு..கேளிக்கை என்பதன் பொருள் வெறும் சந்தோஷம் என்று நினைப்பவர்களே அதிகம்..ஆனால் நம் முன்னோர்களில் அநேகர் இலக்கியத்தில் சாதுர்யத்தையே இன்பமாய் அளித்துள்ளதை அறிந்தவர் அவ்வாறு கூற மாட்டார்..மகாபாரதத்தில், அத்தனை கிளை கதைகள் ஒரே காவியத்தில் சாத்தியமா என்ற ஆச்சர்யப் பார்வையே இத்தனை நாள் அதன் மகத்துவம் குறையாததற்கு காரணம்..ராமாயணம் வெறும் கேளிக்கை சாதனமாய் இருந்திருந்தால் அது ராமர் பாலத்தை வெறும் கல் பாறையாக நம்மை நினைக்க வைத்திருக்கும்..

கலை என்பது மரம் வெட்டுவதை போல ஒரு இயந்திரத் தொழில் இல்லை..முதலில் அது ஒரு தொழிலே இல்லை! அது ஒரு வரம்...அதை பொருள் ஈட்டுவதர்க்காக பயன்படுத்துவதை விட பெரிய பாவம் வேறு இல்லை..அது ஒரு மொழி..மேன்மை அடைவதே அதன் பெருமை..கலைஞர்களுக்கு பெருமை.பொருள் ஈட்ட பல வழிகள் உள்ளன..ஆனால் ஒரு பாதிரியாரை போல் அரிதாரம் இட்டு எவரும் பொருள் ஈட்ட நினைக்க மாட்டர்கள்..அதை போலவே கலை...அது ஒரு தெய்வத் தூது..! மக்களை நெறிப்படுத்த, கற்பிக்க, தூது போவதே அதன் பணி...எதற்கு இதை கூறுகிறேன்?

கலைஞன், முதலில் மாற்ற வேண்டியது, அவன் வியாபார நோக்கத்தை..இப்போது ஒரு கேள்வி எழும்... " சோற்றுக்கு என்ன செய்வது ", என்று...சோற்றுக்காக எழுத்தை உங்கள் தொழிலாக ஆக்கிக்கொள்ளதீர்கள்..உண்மையான ஈடுபாடு இல்லாதவன் எழுத்தாளனாய் ஆக வேண்டா..வேண்டுமென்றால்,சோற்றுக்கு பொருளை ஈட்டும் நேரத்தை விடுத்து,மீதம் உள்ள நேரத்தை கலைக்காக செலவிடுங்கள்...

அடுத்த மாற்றம், எழுத்தை தங்கள் மூச்சாக கொண்டிருப்பவர்கள்,தங்கள் எழுத்தை தமிழ் நாட்டில் மட்டும் படிக்கும்படி இல்லாமல் உலகளவில் தமிழை கொண்டு செல்லக் கூடிய படைப்புகளாக எழுத வேண்டும்..

தமிழில் உள்ள இலக்கியங்களிலேயே பெரிய அளவில் பேசப் பட்ட இலக்கியம், திருக்குறள்...பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு உலக இலக்கியம்..காரணம்? எல்லோருக்கும் பொருந்தும் நன்நெறியை அது விளக்குவதே ..இதை நான் புதிதாய் கூறவில்லை...நினைவுபடுத்துகிறேன்..

தமிழ் நூல்களுள் பல, நம் குடும்பப் பழக்க வழக்கங்களை, பண்பாட்டைச் சுற்றியே சுழல்கின்றன...பல நாடுகளில் இந்த வழக்கங்கள் நடை முறையில் இல்லை..அதற்க்காக நாம் மாற வேண்டுமென்றில்லை ..நம் பண்பாட்டை காப்பதற்கு பல வழிகள் உள்ளன.அதன் மேன்மையை பிறருக்கு உணர்த்த வேண்டுமென்ற கட்டாயமும் இல்லை...அதனால், கதைகளில் இந்த மரபை கொஞ்சம் தளர்த்திக்கொண்டு, உலக பண்பாட்டை பின்பற்றும் கதாபாத்திரங்களும்,உலக நடைமுறைகளைப் பற்றிய சம்பவங்களும்,கொண்ட உலக நிகழ்வுகளை மய்யமாக கொண்டு அதை நம் நாட்டோடு தொடர்பு படுத்தும் பழக்கத்தை கொண்டுவந்தால் நம் மொழி உலகளவில் பேசப்படும்..நம் கதைகள் உலகளவில் படிக்க படும்..

கதைகள் மட்டும் அல்லாமல், உலகில் உள்ள மக்கள் அனைவரையும் படிக்கத் தூண்டும், பின்பற்றத் தூண்டும் கட்டுரைகளை எழுத வேண்டும். உலக மக்களின் வாழ்க்கையை நம் மக்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்..இப்படித் தான் வாழ்கை என்று எண்ணி கொண்டிருப்பவர்களை இப்படியும் வாழலாம் என்று என்ன வைக்க வேண்டும்..

உலகிலேயே ஒரு பொருட் பன்மொழி வார்த்தைகள் தமிழில் தான் அதிகம்..அத்தகைய தமிழில் கவிதைக்கான பஞ்சம் இருப்பது வருத்ததிற்குரியது..கவிதை எழுதுபவன் அரைத்ததையே அரைத்தால் அதன் மவுசு குறையாமல் என்ன செய்யும்? தன் மேல் உள்ள குற்றத்தை தமிழின் மேல் சாட்டுபவன் முட்டாள் என்பதை விட வேறு பெயர் கொண்டிருக்க வாய்ப்பில்லை..இந்து மத எழுத்தாளன் ஒருவன், மீனாட்சி அம்மனின் திருவிழி போன்ற கண் என்று காதலியை வர்ணித்த ஒருவன், சற்று மதப்பற்றை விட்டுவிட்டு மேரி அன்னையின் மீன் விழியோடு அவன் காதலியின் கண்ணை உவமானம் செய்தால் கிறித்தவர்களும் படித்து ரசிப்பார் அல்லவோ...! எழுத்து, மதம், மொழி, ஜாதி, ஆண், பெண், நாடு, கலாசாரம் என்ற வேறுபாடு கடந்தது...அதை மனதில் வைத்துக்கொண்டு, தரமான கவிதை இலக்கியத்தை எழுத வேண்டும் தமிழன்..! ஊட்டி மலைச்சாரலை கவிதையாய் வடிக்கும் தமிழன், ஷேக்ஸ்பியரின் இயற்கையையும் கவிதையில் கொண்டு வர வேண்டும்..

இறுதியாக, எழுத்தை பற்றியே கூற எண்ணுபவன், ஏன் சினிமாவை வம்புக்கு இழுத்தான் என்று எண்ணுபவர்க்கு நான் கடைபிடிக்க எண்ணும் கடைசி மாறுதலை முன்வைக்கிறேன்..

சினிமாவில் இலக்கிய கதைகள், நாவல்கள் பல படமாய் எடுத்தல் வேண்டும்...அதே போன்று, அடுத்த படி, இலக்கியமும் சினிமாவும் கை கோர்த்து பயணிக்க வேண்டும்..சினிமாவில் உள்ள நல்ல கதைகளை எழுத்து வடிவில் வெளியிட வேண்டும்..அதை தேசிய அளவில் பிரபல படுத்த வேண்டும்...

மேலும் கலையை ரசியுங்கள்..கலைஞனை ரசியுங்கள்..அவன் கலையை மட்டும் விமர்சியுங்கள்..உங்களுடைய அலுவலகத்திற்கு வரும் மக்கள் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேச எப்படி அனுமதி இல்லையோ அப்படியே கலைஞனுக்கும்..

நீங்கள் எத்தகைய ஞானியாக இருந்தாலும் உங்கள் வேலையில் அது எப்படி சம்பளத்தை உயர்த்தாதோ, அப்படியே கலையிலும் இருத்தல் வேண்டும்.. ..மக்களும் இதை புரிந்து கொள்ள வேண்டும்..உண்மையான கலைஞனை போற்றுங்கள்..கலைஞன் முதலில் கலைஞனாக மதிக்க படவேண்டும்..

மாற்றத்தை எதிர்நோக்கி, அதை செயல் படுத்தும்,

கண்ணன் ராமசுவாமி...!